கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.ஐ.பி. கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர் ஐகோர்ட்டில் அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மற்றும் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகம், புதுவை மற்றும் தமிழக-கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
கர்நாடகத்தின் மண்டியா, கோலார் தங்க வயல், மற்றும் பெங்களூர் நகரில் வசிக்கும் தமிழர்களும் ஜெயலலிதாவை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவலாகவும், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் அருகே ஜெயலலிதாவை சந்திக்கும் ஆவலுடன் குவிந்துள்ள அ.தி.மு.க.வினரை கட்டுப்படுத்தவும் ஏராளமான போலீசாரை பணியில் ஈடுபடுத்தும் சூழ்நிலை கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமரும், கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேவேகவுடா கூறியதாவது:-
ஒவ்வொரு நாளும் இங்கு (பெங்களூருக்கு) ஏராளமானவர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் சிறப்பு போலீசாரை நியமிக்க வேண்டியுள்ளது. இந்த சுமையை நாம் ஏன் சுமக்க வேண்டும்?
அவருக்கு ஜாமீன் கிடைக்கிறதா? இல்லையா? என்பது நீதித்துறை சம்பந்தப்பட்ட விவகாரம். அதில் நாம் ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள் எந்த நீதி மன்றத்திலாவது போய் முறையிட்டுக் கொள்ளட்டும். இதில் நமக்கு என்ன வந்தது?
எனவே, ஜெயலலிதாவை தமிழ்நாட்டு(சிறை)க்கு மாற்ற வேண்டும் என்று மட்டும் (கர்நாடக) மாநில அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.