வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
1993-1994-ம் ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று என் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், வருமான வரித்துறை உதவி கமிஷனர் கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அந்த கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்கு, அதற்குரிய அனைத்து வகை வரி, கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த தயாராக உள்ளதாக கூறி கடந்த ஜூன் 25-ந் தேதி வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு வருமான வரித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பரிசீலனையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில், கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, என்னுடைய கோரிக்கை மனு வருமான வரித்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும் என்று என் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 30-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதன்பின்னர் இந்த காலஅவகாசம் செப்டம்பர் 6-ந் தேதி வரை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே, வழக்கை தள்ளிவைக்க கூடாது’ என்று பதில் மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவியல் விசாரணை முறை சட்டம் 313-ன் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக அக்டோபர் 1-ந் தேதி தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த உத்தரவு சட்டப்படி ஏற்கமுடியாதது. அதை ரத்து செய்யவேண்டும். வருமான வரித்துறை சட்டம் பிரிவு 279(2)-ன் படி, வருமான வரி கணக்கு செலுத்தாதபட்சத்தில், அதற்குரிய கட்டணத்துடன் அனைத்து தொகைகளையும் செலுத்தலாம். எனவே அவ்வாறு சமரச மனு தாக்கல் செய்து கட்டணம் செலுத்த எனக்கு உரிமை உள்ளது.
ஆனால், இவற்றை விசாரணை கோர்ட்டு நீதிபதி கவனிக்க தவறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே கீழ் கோர்ட்டு நீதிபதி கருத்தில் கொண்டுள்ளார்.
ஆனால், வருமான வரித்துறைக்கு நான் கொடுத்துள்ள சமரச மனுவினால், இந்த வழக்கின் நிலை மாறி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த கால கெடுவை கீழ்கோர்ட்டு நீதிபதி பரிசீலித்து இருக்கக்கூடாது. மேலும் என்னுடைய சமரச மனுவை, (மனு கொடுத்த நாளில் இருந்து) 180 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சட்டம் கூறுகிறது.
எனவே, இந்த சூழ்நிலையில், என்னை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது அரசியல் சட்டத்துக்கும், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது செயலாகும்.
எனவே, வருமான வரி வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 18-ந் தேதி எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற மனுக்களை சசிகலாவும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.