Mar 25, 2020

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி அரசு அதிகாரிகள் ஆய்வு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.


இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில், 
திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கிருமிநாசினி முழு அளவில் தெளிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை மக்கள் அதிக அளவில் காய்கறி வாங்குவதற்காக கூடிவிட்டனர். பின்னர் காவல் துறையினர் மூலம் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடைக்காரர்கள் மட்டுமே வந்து காய்கறி வாங்கி செல்ல வேண்டும். மக்கள் வரக்கூடாது. அதே போல் இன்று காலை திறக்கப்பட்ட டீக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து காவல் துறை மூலம் 7 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள், பால் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். ஆனால் மக்கள் அதிக அளவில் கூட கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். அதனால் மக்கள் பதற்றமின்றி அதை வாங்கி வைக்க வேண்டுமென்று தீவிரம் காட்டக்கூடாது. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியில் வரக்கூடாது. அவர்களுக்கு நோய்த்தொற்று எளிதில் ஏற்படும். இந்த நோயை கண்டு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.  வீட்டிற்குள் இருந்தால் இந்த நோய் வராது. திருச்சி அரசு மருத்துவமனையில் 11 பேர் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேருக்கு ரத்த பரிசோதனை முடிவு வந்துவிட்டது. அதில் கரோனா இல்லை. மீதமுள்ள ஐந்து பேரும் சாதாரண சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கரோனாவுக்கான ரத்த பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுகிறது.
அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடுகள் சென்று வந்தவர்களிடம் பொதுமக்கள் யாரேனும் நெருங்கி பழகியிருந்தால் உடனடியாக 1077 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அவர்கள் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்குவார்கள்.  மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்புவதுக்கு வாகன வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மூன்று பிரத்தியேக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

திருச்சி 24.3.20 மாவட்ட ஆட்சித்தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

 வெளிநாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் மூலம் திருச்சி வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 483 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது ரத்த பரிசோதனையின் போது கரோனா தாக்குதல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பி விட்டனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை அடையாள படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களிடம் நெருங்கிப் பழகிய குடும்பத்தினரும் வெளியில் வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதேபோல் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த பலர் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு கார் மூலம் சென்றுள்ளனர். அவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி உதவி திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடையில் நிதியுதவி அளிக்கப்படும். ரேஷன் கடைக்கு வரும்போது ஒரு மீட்டர் இடைவெளி பின்பற்றவேண்டும். ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1.32 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இசிஎஸ் மூலம் நிதி உதவி வரவு வைக்கப்படும். டீக்கடை, மளிகை கடை, காய்கறி கடை, பால் கடை போன்ற அத்தியாவசியத் கடைகள் திறந்து இருக்கலாம். ஆனால் கூட்டம் கூட கூடாது. இதேபோல் ஹோட்டல்களும் திறந்திருக்கலாம். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். கூட்டம் இல்லாமல் அதுவும் பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியூரில் இருந்து வந்த பயணிகள் 198 சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வந்து செல்ல தடை இல்லை. மாட்டுத்தீவனம், உரம் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் கிடையாது.  வீட்டில் பயன்படுத்தும் வழக்கமான சோப்பை பயன்படுத்தி கை கழுவலாம். மாஸ்க் மற்றும் சானிட்டரி திரவம் அவசியமில்லை. கரொனா தொடர்பான எவ்வித சந்தேகத்துக்கும் 1077 என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு வருவோர் ஷேர் ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் வரலாம்.
 தமிழகம் முழுவதும் வெளிநாடுகளிலிருந்து வந்த 54 ஆயிரம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 30, மணப்பாறை அரசு மருத்துவமனை 30 படுக்கைகள் உள்ளது. இது தவிர இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 வீதம் 60 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது.
 சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது தவறில்லை. ஆனால் கூட்டமாக கூடி அன்னதானம் வழங்க கூடாது. திருமண மண்டபங்கள் போன்ற இடங்களிலும் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.