விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’ என்றார்.
பொறுப்பு ஏற்றார்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இவர் மாவட்ட செயலாளர் ஆவது இது 2வது முறையாகும். மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அருப்புக்கோட்டை வைகைசெல்வன், விருதுநகர் மாபா பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
சாதாரண தொண்டன்
சமானிய குடும்பத்தில் பிறந்து எளிய தொண்டனாக அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டேன். திருத்தங்கல் பேரூராட்சி செயலாளர், நகர செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. ஆக பணியாற்றினேன். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளராகவும் கட்சி பணியாற்றிய என்னை அமைச்சராகவும் நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழகு பார்த்தார். உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சி பணியாற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு சேவை செய்தால் அதற்குரிய இடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார் என்பதற்கு இதுவே உதாரணம்.
7 தொகுதிகளிலும் வெற்றி உறுதி
என்னை இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்து கட்சி பணியாற்ற முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாய்ப்பு தந்துள்ளார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக திறம்பட கட்சி பணியாற்றுவேன். விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இப்போதே பம்பரம் போல் சுழன்று பணியாற்றிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக் கொடி நாட்ட அனைவரும் அயராது பாடுபட வேண்டும். உங்கள் ஒத்துழைப்போடும், மக்களின் ஆதரவோடும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநில மகளிரணி நிர்வாகி சக்தி கோதண்டம், மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், இணை செயலாளர் ரமாதேவி குருசாமி, மகளிர் அணி செயலாளர் கவுரி நாகராஜன், விருதுநகர் ஒன்றியக்குழு தலைவர் கலாநிதி, ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகர்மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முகம்மது நயினார், சிவகாசி நகர்மன்ற தலைவர் டாக்டர் கதிரவன், நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி (சாத்தூர் கிழக்கு), தேவதுரை (மேற்கு), மயில்சாமி (ஸ்ரீவில்லிபுத்தூர்), சங்கரலிங்கம் (அருப்புக்கோட்டை), ராமமூர்த்தி ராஜ் (காரியாபட்டி), குருசாமி (ராஜபாளையம் மேற்கு), பூமிநாதன் (நரிக்குடி), முத்துராமலிங்கம் (திருச்சுழி), அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முத்துராஜா, நகர செயலாளர் கண்ணன், நகர மாணவரணி செயலாளர் வீரகணேஷா, நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருத்தங்கல் சென்று அங்குள்ள தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.