Feb 26, 2020

தமிழக முதல்வர் பேட்டி

திருச்சி

                    
    
திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உடைந்தது. இதற்கு பதிலாக தற்காலிக ஏற்பாடுகள் மூலம் உடைப்பு சரிசெய்யப்பட்டது. சேதமடைந்த தடுப்பணைக்கு பதிலாக அருகில் 387.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவடைய வேண்டும். இந்நிலையில் இந்த பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கி கூறினர். இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வலுவிழந்து உடைந்த பாலத்திற்கு  மாற்றாக புதிய தடுப்பணை அறிவிக்கப்பட்டு 387.60 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தற்போது 35 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பணிகள் விரைந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகள் காரணமாக விவசாயம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளார்கள். அதனால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறிக்கொண்டே தான் இருக்கவேண்டும். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. நீர் வழங்காமலும் இருக்க முடியாது. நீரை திருப்பி விடவும் முடியாது. கர்நாடகாவின் இத்தகைய செயல்பாடுக்காக யாரையும் குறை சொல்ல முடியாது. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதோ அந்தந்த பகுதிகள் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.  10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.  என்பிஆர்.ல் தற்போது மூன்று கேள்விகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று மொழி, இரண்டாவதாக பெற்றோர் பிறப்பிடம், மூன்றாவதாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளது.  நாங்கள் மக்களை செல்கிறோம்.   கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள்  ஆகியோர்தான் தேர்தலை நிர்ணயம் செய்வார்கள். ஒரு பொருளுக்கு ஏஜென்சி அளிப்பது போல் உள்ளது.  ராஜ்யசபா தேர்தலில் யார்? யார்? போட்டியிடுவது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். சீட்டு கேட்பதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசின் பரிசீலனையில் உள்ளது. காவிரியாற்றில் எந்த இடத்தில் மணல் அள்ளலாம் என்பதை கமிட்டிதான் முடிவு செய்கிறது. அந்தந்த பகுதிகளில் மட்டுமே மணல் எடுக்கப்படுகிறது. எனினும் தற்போது அனைத்து இடங்களிலும் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. எம் சாண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த அரசு பணிகளுக்கு மட்டுமே தற்போது மணல் பயன்படுத்தப்படுகிறது என்றார்.