கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஆய்வாளர் பணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து)கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, துறையின் செயலாளர் விஜயகுமார்.
கால்நடைத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவச் சிகிச்சை, மேம்பட்ட பராமரிப்பு முறைகள் ஆகிய சேவைகள் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள் மூலம் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், கால்நடைக் கிளை நிலையங்களில் செயற்கைக் கருவூட்டல், முதலுதவி சேவைகள் கால்நடை ஆய்வாளர்கள் மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தொலை தூரக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில்
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த நிதியாண்டில் 289 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2012-13-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கால்நடை ஆய்வாளர்களில் பயிற்சி முடித்த 307 பேருக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2-க்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வழங்கினார்.
இதன் மூலம், தொலைதூர குக்கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்குச் செயற்கை முறைக் கருவூட்டல், முதலுதவிச் சேவைகள் ஆகியன அவற்றின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.