புதுவையில் அதிமுகவின் முழு அடைப்பு போராட்டத்தால், சனிக்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், நீதி வழங்கி அவரை விடுவிக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் புதுவையில் சனிக்கிழமை முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், முக்கிய வீதிகள், நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
தமிழகப் பகுதியிலிருந்து வந்த பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பயணிகள் பேருந்து வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகினர். கடைகள் அடைப்பு, பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இரு அணிகளாக மறியல்: அதிமுக மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் எம்எல்ஏ தலைமையில் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 76 பேர், அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், பெரியசாமி, பாஸ்கர் தலைமையில் அண்ணாசிலை அருகே சாலை மறியல் செய்த 120 பேர், மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சாமிநாதன் தலைமையில் அண்ணாசாலை ராஜா திரையரங்கம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
புதுவையிலிருந்து கும்பகோணம் சென்ற தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து மீது முதலியார்பேட்டை மரப்பாலம் அருகே மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன.
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்ட அதிமுக செயலர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமை பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது.