தற்கொலைக்கு முயன்ற மாயாவை தடுக்கும் போலீஸார். அருகில் அவரது மகள் குணப்பிரியா.
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நடிகை மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மாயா (45). அவர் நேற்று பகல் 12 மணியளவில் வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்தின் நுழைவாயிலில் இருந்த பெண் போலீஸார் அவரை தடுத்து, அங்குள்ள அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அவரிடம் ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெய் இருந்தது. அதை போலீஸார் வாங்க முயன்றபோது, திடீரென வெளியே வந்த மாயா, பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், அவரை தடுத்து காப்பாற்றினர்.
இதையடுத்து ‘அம்மாவை (ஜெயலலிதா) விடுதலை செய்யவேண்டும்' என்று கோஷம் போட்டபடி, ஆணையர் அலுவலகம் எதிரே படுத்து உருண்டார். அவரது மகள் குணப்பிரியாவும் அவருடன் வந்திருந்தார். மாயா மீது வழக்கு பதிவு செய்த வேப்பேரி போலீஸார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவரை விடுவித்தனர்.