Jan 6, 2020

திருச்சி பூலோக வைகுண்டத்தில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 பூலோக வைகுண்டம் என்னும் சிறப்புக்குரிய இக்கோயிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்

வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதியும், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதனைக் கடந்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்று கோஷமிட்டு ரங்கநாதரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

சொர்க்கவாசல் நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். நாளை முதல் 8 நாள்களுக்கு மதியம் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது