தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் மட்டும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயங்காது என்று பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் கே.தங்கராஜ் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஒருமித்த ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்களில் ஓடும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பஸ்கள் இயக்கப்படமாட்டாது. இந்த போராட்டத்தின் போது காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சாலைகளில் எந்த தனியார் பஸ்களும் ஓடாது. மேலும், ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் அமைதியான முறையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டமும் நடக்கிறது. இதில் அனைத்து பஸ் உரிமையாளர்கள், டிரைவர் கள், கண்டக்டர்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.