Sep 18, 2014

அம்மா நிரபராதி"... காஞ்சிபுரத்தில் பேனர் வைத்த அதிமுக பிரமுகரால் பரபரப்பு




காஞ்சிபுரம்: பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மா நிரபராதி என்று குறிப்பிட்டு காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பேனரை வைத்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பரிமளம் எனபவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை முடிவடைந்து வருகிற 27ம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதனால் அதிமுக தரப்பில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு காணப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் அதிமுகவின் அம்மா பேரவை துணைச் செயலாளர் பரிமளம் என்பவர் ஒரு பேனரை வைத்தார். அதில் அம்மா நிரபராதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் பரிமளத்தை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.