Oct 3, 2014

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக காரைக்காலில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

காரைக்காலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததையொட்டி அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் வேளையில், புதுவை மாநில அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எம்.வி.ஓமலிங்கம் முன்னிலையில், புதுவை மாநில அதிமுக செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.புருஷோத்தமன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
குற்றம் செய்யாத ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் மறுப்பு தெரிவிப்பதும் சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பானது எனவும், அவர் விடுதலை செய்யப்படவேண்டும். புதுவை மாநில அதிமுக அவருக்கு எப்போதும் துணை நிற்குமென கட்சியினர் பேசினர். மேலும்  கட்சியினர், காவிரித் தண்ணீரை பெற்றுத்தந்ததற்காக கர்நாடக அரசு ஜெயலலிதாவை பழிவாங்குவதாகப் பேசினர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்களவை முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வி.கே.கணபதி, வி.எம்.சி.வி.கணபதி மற்றும் அதிமுக மாவட்ட பொருளாளர் எச்.எம்.ஏ.காதர், நகர செயலர் ஜி.வி.ஜெயபால், துணை செயலர் சாகுல்ஹமீது, ஜீவானந்தம் உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.