Oct 3, 2014

ஜெ. கைதுக்கு எதிர்ப்பு: புதுவையில் நாளை "பந்த்" நடத்த அதிமுக அழைப்பு! மாநில செயலர் அதிருப்தி!!

ஜெ. கைதுக்கு எதிர்ப்பு: புதுவையில் நாளை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக மாநில செயலர் புருஷோத்தமனோ தமக்கு தெரியாமல் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தண்டனை பெற்று, கைது செய்யப்பட்ட ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரியில் பந்த் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக நகர்ப்புற செயலர் டி.ரவீந்திரன், இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்தார். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் என அனைத்துப் பகுதிகளிலும் பந்த் நடத்தப்படுகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பின்போது புதுச்சேரி சட்டசபை அதிமுக துணைத் தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், எல்.பெரியசாமி, பாஸ்கர் ஆகியோரும் உடன் இருந்தனர். மாநில செயலர் அதிருப்தி இதனிடையே புதுச்சேரி மாநில அதிமுக செயலர் புருஷோத்தமனோ, தமக்கு இந்த முழு அடைப்புப் போராட்டம் பற்றி எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் புதுச்சேரி அதிமுகவில் கமுக்கமாக இருந்து வந்த உட்கட்சி பூசல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. புருஷோத்தமனின் இந்த அதிருப்தியால் நாளைய முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.