மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் இன்று
நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் கதிரவன், துணை மேயர் திரவியம், மண்டல
தலைவர்கள் ராஜபாண்டியன், சாலைமுத்து, ஜெயவேல் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க.
கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் மேயர் ராஜன்
செல்லப்பா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக
வேண்டும். மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களை திறந்த மக்களின்
முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி போன்ற தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து
ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்ததாக தி.மு.க. தலைவர்
கருணாநிதியை கண்டித்து மேயர் ராஜன்செல்லப்பா தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது அங்கிருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து சபையில் இருந்து வெளியேறிய தி.மு.க. கவுன்சிலர்கள் சிறிது நேரம் கோஷமிட்டு மீண்டும் அவைக்கு வந்தனர்.
மாநகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–
ராஜபாண்டியன்,
மேற்கு மண்டலத் தலைவர்:– மதுரையில் பல்வேறு இடங்களில் கொசுத் தொல்லைகள்
அதிகமாக உள்ளது. இந்நாட்டு மன்னர்கள் போல கொசுக்கள் வலம் வருகின்றன.
மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். மீன் மார்க்கெட்டை
விராட்டி பத்துக்கு மாற்றியதை வரவேற்கிறேன். ஆரப்பாளையம் முதல்
அருள்தாஸ்புரம் வரை தரைப்பாலம் அமைப்பதற்கு மாநகராட்சிக்கு பாராட்டு
தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரப்பாளையம் பஸ் நிலையம்,
டி.பி.ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனை தடுக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். வைகை ஆற்றில் கோச்சடை, ஆரப்பாளையம், குருவிக்காரன்சாலை
ஆகிய இடங்களில் தடுப்பனைகள் அமைத்து நகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம்
உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டலங்களுக்கு அதிகாரம் வழங்கும்
வகையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திட்டப்பணிகளை மண்டல அலுவலக உதவி
கமிஷனர்களே செய்யும் வகையில் அதிகாரம் வழங்க வேண்டும்.
ஜெயவேல்,
வடக்கு மண்டலத்தலைவர்:– வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் பிரச்சினை
அதிகரித்து உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். மேலும் 3 நாட்களுக்கு
ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்தால் போதும்.
மேயர்:– இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைமுத்து,
தெற்கு மண்டலத்தலைவர்:– மதுரை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை
போக்கும் வகையில் மக்களின் முதல்வர் அம்மா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வருகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை நகர மக்களுக்கு அம்மா வழங்கி
உள்ளார். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்காக ஆட்சி
நடத்தினார். மதுரையில் இருந்த மு.க.அழகிரி சட்டத்தை தன் கையில் எடுத்து
அராஜகம் செய்தார்.
அப்போது அவையில் இருந்த தி.மு.க.வை சேர்ந்த
கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு
அ.தி.மு.க. கவுன்சிலர்களும் எழுந்து பேசினர். இதனால் அவையில் கூச்சல்,
குழப்பம் ஏற்பட்டது. உடனே மேயர் ராஜன்செல்லப்பா குறுக்கிட்டு அமைதி
காக்கும்படி கவுன்சிலர்களை கேட்டுக் கொண்டார். ஆனாலும் தொடர்ந்து கூச்சல்,
குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய மேயர் தி.மு.க. கவுன்சிலர்கள்
அழகிரிக்கு எதிராக பேசியதால் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களே? நீங்கள்
கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வா, அல்லது அழகிரி தலைமையிலான தி.மு.க.வா
என்பதை விளக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தி.மு.க.வினர் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
வழக்கமாக ஒவ்வொரு
மாநகராட்சி கூட்டத்திலும் கறுப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க.
கவுன்சிலர்கள் இன்றைய கூட்டத்தில் வெள்ளைச்சட்டை அணிந்து வந்தனர். மேற்கு
மண்டலத் தலைவர் ராஜபாண்டியன் கறுப்பு சட்டை அணிந்து கொண்டு கூட்டத்தில்
கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், மக்களின் முதல்வர் அம்மா,
முதல்வராக இல்லாததால் அ.தி.மு.க.வினருக்கு கறுப்பு நாள், அதை உணர்த்தும்
வகையில் கறுப்பு சட்டை அணிந்துள்ளேன் என்றார்