திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் தேவணம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை 39 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.இந்த பண்ணையில் தேசிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.51.5லட்சம் செலவில் 1.5 மெட்ரிக் டன் திறனுடைய புதிய விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளாளவு கொண்ட கிடங்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மூன்றரை லட்சம் லிட்டர் கொள்ளாளவு தரைமட்ட தண்ணீர் தொட்டியில் 1500 மீன் குஞ்சுகள் வளர்க்க விடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் 7ஏக்கர் நிலப்பரப்பில் மக்காசோளம் மற்றும் சோளம் பயிரிட விதைகள் விதைக்க தயார் நிலையில் உள்ளது. நீண்ட காலமாக பயன்பாடு இன்றி இருந்த இப்பண்ணையை தமிழக முதலவராக ஜெயலலிதா 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு முதல் செயல்பட துவங்கி ரூ.1,96,712 லாபம் ஈட்டியுள்ளது. இப்பண்ணைய வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.அப்போது இப்பண்ணையில் தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் சின்னவெங்காயம் ஆராய்ச்சி மையம்,தென்னை நாற்றுப்பண்ணை அமைக்க உத்தரவிட்டார். பின்னர் பண்ணையில் தென்னங்கன்று நட்டார். பொங்கலூர் அரசு விதைப்பண்ணையை சீரமைப்பு செய்து லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் மற்றும் வேளாண்மை துறையினரை பாராட்டினார்.
இந்த ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,பொங்கலூர் ஒன்றிய தலைவர் எஸ்.சிவாச்சலம், மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல்,பல்லடம் வட்டாட்சியர் அம்சவேணி,வேளாண்மை துறை இணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன், துணை இயக்குநர்கள் அல்தாப், மகேந்திரன், பொங்கலூர் வேளாண்மை அலுவலர் வசந்தாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காசோளம் வெட்டும் இயந்திரம் அதிக அளவில் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று வேளாண்மை துறை அமைச்சரிடம் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் கோரிக்கை விடுத்தார்.அது பற்றி பரிசிலனை செய்வதாக வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார்.திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உள்ளார்.