பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள செயின்ட் தெனிஸ் என்ற இடத்தில் ஆண்டு தோறும் எம்.ஜி.ஆர். விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. விழாவில், நடிகர் அசோகனின் மகனான திரைப்பட நடிகர் வின்சென்ட் அசோகன், ‘இதயக் கனி’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் அகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில், பிரான்ஸ் நாட்டின் அனுமதி பெற்று, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தபால் தலையை செயின்ட் தெனிஸ் துணை மேயர் பொதில் ஹமுதி வெளியிட நடிகர் வின்சென்ட் அசோகன் பெற்றுக் கொண்டார். இதே போன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தபால் தலையை மற்றொரு துணை மேயர் சிலிமான் ஏபல்லா வெளியிட எஸ்.விஜயன் பெற்றுக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, பாரிஸ் நகரில் எம்.ஜி.ஆர். சிலை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கவிதை அரங்கம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பிரான்ஸ் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் முருகு பத்மநாபன் செய்திருந்தார்.