தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெங்களூர் வந்தார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
அனுமதி மறுப்பு
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சசிகலா, இளவரசியும் சிறையில் உள்ளனர்.
ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள் மற்றும் பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள், நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் வருகை
இந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில அமைச்சர்களும் வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஜெயிலில் உள்ள கைதிகளை சந்திக்க அனுமதி இல்லை.
இதனால் அவர்கள் நேற்று இரவு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தனது தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது குறித்து விளக்கி கூறுகிறார். தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி பெங்களூர் நகர போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.