Sep 30, 2014

நாகையில் மீனவர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்




சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து, நாகையில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை கண்டித்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை நம்பியார் நகர் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் சுமார் 200 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் இயக்குனர் கண்ணன், சங்கர், சுரேஷ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளப்பள்ளம்

அதே போல வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 450 பேர் வெள்ளப்பள்ளம் தார் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும் இந்த உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.வினர் 50 பேர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

அதேபோல், நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு நாகை காடம்பாடி அருகே நாகை - நாகூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செங்கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த பேரணி காடம்பாடி வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகை புதிய பஸ் நிலையம் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.