Sep 30, 2014

முதல் "அசைன்மென்ட்"டாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- கொ.ஜ.க. கோரிக்கை!

முதல்


அதிமுகவினர் இன்னும் ஜெயலலிதா ஷாக்கிலிருந்து விடுபடவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அரசும் அழுத கண்ணும், புலம்பிய மனமுமாக பதவியேற்று முடித்துள்ளது. சட்டசபை கூடுமா என்பதும் கூட தெரியவில்லை. இந்த நிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தில் இதை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுங்கள் என்று கூறி ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது கொங்குநாடு ஜனநாயக கட்சி. இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம்: புதிதாக பொறுப்பேற்ற மாண்புமிகு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கும் கொங்குநாடு ஜனநாயக கட்சி மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை முதல் தீர்மானமாக அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி கொங்குமண்டல மக்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும். கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு 28.07.2014 அன்று அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடர்பாக கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் நாகராஜ் அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தார். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 500 குளம், குட்டைகளை ஒரு டி.எம்.சி. தண்ணீரால் நிரப்பினால் 30 இலட்சம் மக்களும்,50,000 கால்நடைகளும் வாழ்வாதாரம் பெறும்.1,000 மெகாவாட் மின்சாரம் சிக்கனமாகும் என தமிழக முதல்வருக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசின் சிறப்புச்செயலாளர் அனுப்பிய பதில் கடிதத்தில் 03.06.2014 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு பாரதப்பிரதமரை நேரில் சந்தித்து அத்திக்கடவு- அவினாசி திட்டம் உள்பட நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவேற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி திட்டச்செலவில் 25% தமிழக அரசு நிதி ஒதிக்கினால் மட்டுமே திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 50 ஆண்டு காலமாக 310 கோடியில் காமராஜர் அவர்களால் துவங்கப்பட்ட இத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. 1956 முதல் 2006-ம் ஆண்டு வரை மட்டும் 50 ஆண்டுகளில் 40 ஆண்டுகள் மட்டுமே பவானிசாகர் அணையின் தேவை போக மீதமுள்ள உபரிநீர் வீணாக கடலில் சென்றுள்ளது. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை 5 முறை அணை நிரம்பி 25 டி.எம்.சி. உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் 3 ஆண்டு காலம் 3 மாவட்டங்களில் 500 குளம்,குட்டைகள் நிரப்பப்படுவதால் விவாசயம் செழிக்கும். கொங்குநாடு ஜனநாயக கட்சி தொடர்ச்சியாக பலமுறை முதல்வருக்கு கடிதம் அனுப்பியும் அரசு சிறப்புச்செயலாளர்களை நேரில் சந்தித்தும் இதுவரை திட்டம் முன்னேறுவதற்கான எவ்வித முகாந்தரமும் இருப்பதாக தெரிவதில்லை. தமிழக முதல்வர் இதுவரை இத்திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தமிழக அமைச்சர்கள் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பொதுக்கூட்டங்களில் பேசுவதோடு சரி சட்டசபையில் அவர்கள் இதுபற்றி பேசுவதில்லை. 50 ஆண்டு காலமாக வழித்தடத்தை நிறைவேற்ற ஆய்வுகள் நடைபெறுவதாக சொல்லுவதால் இதை "நீண்டகாலமாக நடைபெறும் ஆய்வு"என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்யலாம். கடந்த ஆண்டு 835 கோடியை வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கிய தமிழக அரசு இத்திட்டம் நிறைவேற ஆரம்பகட்ட நிதியாக 200 கோடி நிதியை ஒதுக்கி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறு கொங்குநாடு ஜனநாயக கட்சி கேட்டுக்கொள்கிறது. பாரதப்பிரதமரிடம் மனுகொடுப்பதால் மட்டும் இத்திட்டத்தை நிறைவற்ற முடியாது. வரும் நவம்பர் 18-ல் கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்திற்குள் இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கிடைக்கப் பெறவில்லை என்றால் கொங்குநாடு ஜனநாயக கட்சி கிராமம், கிராமமாக சென்று இத்திட்டத்திற்கு மக்களை ஓரணியில் திரட்டி அரசுக்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் என கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.