Sep 30, 2014

ஜெயலலிதா அவசர மனு: கர்நாடக ஐகோர்ட் தலைமை பதிவாளருடன் நீதிபதி குன்ஹா திடீர் சந்திப்பு!

Jayalalithaa-gets-relief-in-disproportionate-assets-case




























சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.
இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஜாமீன் மனுவை இன்று விசாரித்த விடுமுறைகால நீதிபதி ரத்னகலா, மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாயிடம், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த மனுவை அளித்துள்ளார்.
இதனிடையே, ஜெயலலிதா தரப்பில் அவசர மனு அளிக்கப்பட்ட நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பட்டேலை, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

- See more at: http://newsalai.com/?p=28469#sthash.b7WHQPOZ.dpuf