4 ஆண்டு சிறை சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
கல்லூரி மாணவி திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அ.தி.மு.க. உறுப்பினர். இவருடைய மகள் ஜோனாஷா டி சன்னா (வயது 19), லால்குடி பரமசிவபுரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் படித்து வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்த ஜோனாஷா டி சன்னா, ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை பார்த்ததும் மிகுந்த வேதனை அடைந்தார்.
அ.தி.மு.க.வினர் அஞ்சலி இதனால் மனமுடைந்த அவர், தனது வீட்டு சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், வேதனை தாங்காமல் ஜோனாஷா இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவியின் உடலுக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. உள்பட அ.தி.முக. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மிகுந்த வேதனை இதைப்போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீவிர சிகிச்சை இதனால் வேதனை தாங்கமுடியாமல் அலறியபடியே தெருவில் ஓடிய அவரை, அந்த பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.