சென்னை: அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, அதிமுகவினர் தீர்ப்பு வழங்கப்பட்ட சனிக்கிழமை பிற்பகல் முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மாநிலம் முழுவதும் பஸ்கள் மீது கல் வீசப்பட்டன. காஞ்சிபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மொத்தம் 3 பஸ்கள் கொளுத்தப்பட்டன. கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. சாலை மறியல்களும் நடந்தன. 2வது நாளான நேற்றும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. பல இடங்களில் கடைகளை அடைக்கச் சொல்லி அதிமுகவினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் 2வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் எம்ஜிஆர் சமாதியில் தி.நகர் எம்எல்ஏ கலைராஜன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் பேராட்டத்தை தொடங்கினர். அதேபோல், கோவையில் காந்திபுரம் பஸ்நிலையம் அருகே அதிமுகவினர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். வேலூரிலும் மாநராட்சி முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
மதுரையில் மேலமாசி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் பேராட்டத்தை தொடங்கினர். அதில் மேயர் ராஜன் செல்லப்பா, மதுரை ஆதீனம், நடிகை சரஸ்வதி உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி ஸ்ரீரங்கத்திலும் அதிமுகவினர் 300 பேர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். தூத்துக்குடியில் நகரச் செயலாளர் ஏசாதுரை தலைமையில் 500 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.மாவட்ட தலைநகர்களிலும், முக்கிய நகரங்களிலும் அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், சில ஊர்களில் அதிமுகவினரின் போராட்டம் காரணமாக ஆங்காங்கே கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.