Nov 26, 2014

உடுமலை ரெயில்வே மேம்பால பணிகளை சட்டமன்ற துணைத்தலைவர் ஆய்வு செய்தார்.

உடுமலை நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப்பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார்.
 திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில் கடந்த 2009ம் ஆண்டில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலப்பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பாலப்பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தன.இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதற்கிடையில், பழனி-உடுமலை-பொள்ளாச்சி வழித்தடத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி ரெயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் மேம்பாலப்பணிகள் முடிவடையாத சூழ்நிலை ஏற்படுமானால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு இப்பணிகளை விரைவு படுத்த வேண்டும் என மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தது இருந்தனர்..


ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆலோசனையின் பேரில் மேம்பால பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், அண்ணா தி.மு.க. நகர\ செயலாளர் கே.ஜி.சண்முகம், வழக்கறிஞர் கண்ணன், கவுன்சிலர் கண்ணன், தொகுதிச் செயலாளர் பாண்டியன், குடிமங்கலம் ஒன்றியக்குழுதலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.