அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மைதீன் சனிக்கிழமை கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் குமரன் ரோட்டில் உள்ள அரோமா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மைதீன் தலைமை தங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாடுபடும் கட்சியாகும். அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். சிறுபான்மை சமுதாயத்தினர் தங்களுக்கான அடையாளங்களை இழந்துவிடாமல் இருக்க முஸ்லிம் லீக் பாடுபட்டு வருகிறது.பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் என எதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடன்படுவதில்லை. அப்படி ஈடுபடுபவர்களை ஆதரிப்பதும் இல்லை. சில திசைமாறிய குழப்பத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை அது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தும் பணியை இக்கட்சி மேற்கொண்டு வருகிறது. காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக கட்சி சார்பில் ரூ. 25 லட்சத்தை விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வழங்க இருக்கிறோம்.தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுகவுடன் தற்போது கூட்டணி வைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் அது தொடரும் என சொல்ல முடியாது. அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார் என ஒருதரப்பினர் கூறினாலும், நீதித்துறை இது குறித்து மாற்றாக சிந்தித்திருக்க வேண்டும். சிறையில் அடைத்ததால் ஜெயலலிதாவிற்கு மக்கள் மத்தியில் அனுதாப அலை பெருகி உள்ளது. அவரை விமர்சித்தவர்கள் கூட அனுதாபம் தெரிவிக்கின்றனர். அண்ணா தி.மு.க.ஆட்சிக்கு என்பதை விட ஜெயலலிதா மீது மக்களிடம் ஆதரவு அலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. நல்லது நடக்கும் என அண்ணா தி.மு.க.வினர்களும், மக்களும் எதிர் பார்கின்றனர். எனவே அண்ணா திமுகவினருக்கு மிகவும் பொறுப்பு உள்ளது. அமைச்சர்கள் தங்கள் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாள்களாக தமிழகத்தில் அமைதி நிலவுகிறது.அவர்கள் அவர்களின் கட்சிக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டுள்ளனர்.
அதிக பெரும்பான்மையுடன் அண்ணா திமுக கட்சி உள்ளது.அந்த கட்சியில் குழப்பம் இல்லை. எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரக்கூடும் என ஒரு சில கட்சிகள் எதிர்பார்த்தாலும் கூட அது யூகமே தவிர அதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு கதர் மைதீன் கூறினார். பேட்டியின்போது புறநகர் மாவட்ட செயலாளர் சையத் முஸ்தபா,மாவட்ட தலைவர் ஹம்சா, மாநகர் மாவட்ட தலைவர் சிஹாபுதீன், ஜவஹர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.