விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை
உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர்
வழங்கினர்.
பூஜை உபகரணங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை
உபகரணங்கள் வழங்கும் விழா விருதுநகர் வேலாயுதத்தேவர் பிள்ளையார் கோவில்
திருமண மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 380
சிறு கோவில்களுக்கு கோவில் பூசாரிகளிடம் அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார்,
கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பூஜை உபகரணங்களை வழங்கினர். விழாவில்
அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது தெரிவித்ததாவது:-
தமிழக முதலமைச்சர் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயனடையும்
வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் 380 சிறு கோவில்களுக்கு வழங்கப்படவுள்ள தூபக்கால்,
மணி, அகல்விளக்கு மற்றும் தொங்கு விளக்கு அடங்கிய பூஜை உபகரணங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
அன்னதான திட்டம்
முதலமைச்சரால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் கோவில் அன்னதானத்
திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு
வருகிறது. கோவில்களில் குடமுழுக்கு, கோவில் பராமரிப்பு, தற்காலிக
பணியாளர்களை நிரந்தரம் செய்தல், போன்ற எண்ணற்ற திட்டங்களை
செயல்படுத்தியுள்ளனர். மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
கோவில்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள 132 கோவில்களுக்கும் திருப்பணி
வேலைகள் செய்திட தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 17
கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அறிவித்த திட்டங்கள் மட்டும்
அல்லாமல் அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்கள்.
இத்தகைய தாயுள்ளம் கொண்ட முதலமைச்சருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன்
பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பணி நிரந்தரம்
விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது தெரிவித்ததாவது:-
முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வருமானம் இல்லாத 10 ஆயிரம்
சிறு கோவில்களுக்கு முறையாக பூஜை செய்திட ஏதுவாக ரூ.2.50 கோடி மதிப்பில்
பூஜை உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவித்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.5.7 லட்சம் மதிப்பில் சிறு கோவில்களுக்கு பூஜை
உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த
தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப் பணியாளராக காலமுறை ஊதியத்தில் வரன்முறை
செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில்
கோவில்களில் பணியாற்றி வந்த 15 பணியாளர்கள் பணி நிரந்தரம்
செய்யப்பட்டுள்ளனர். நலிவடைந்த கோவில்களில் ஒருகால பூஜையாவது நடைபெற
வேண்டும் என்ற உயர்ந்த திட்டத்தின் கீழ் 187 திருக்கோவில்களில் பூஜை
நடைபெற்று வருகிறது.
மாத உதவித்தொகை
விருதுநகர் மாவட்டத்தில் பூசாரிகள் நல வாரியத்தில் 2328 கிராமக்கோவில்
பூசாரிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். கிராமப்புற பூசாரிகள்
ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற 57 பூசாரிகளுக்கு மாதாந்திர
உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த
எண்ணம் கொண்ட முதல்வருக்கு நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி., எம்.எல்.ஏ.
இந்த விழாவில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள்
வைகைச்செல்வன், பாண்டியராஜன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர்
செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன், விருதுநகர்
நகர்மன்றத் தலைவர் சாந்திமாரியப்பன், துணைத்தலைவர் மாரியப்பன், யூனியன்
தலைவர்கள் கலாநிதி (விருதுநகர்), வேலாயுதம் (சாத்தூர்),
ரேவதிகாசிதுரைபாண்டியன் (வெம்பக்கோட்டை), துணைத்தலைவர் மூக்கையா, நகர்மன்ற
உறுப்பினர் முகமது நயினார், உதவிஆணையர் ஹரிஹரன், உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள், சிறு கோவில் பூசாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து
கொண்டனர்