புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெற்ற நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை, விருதுநகர், சிவகாசி, தேனி, திண்டுக்கல் மற்றும் பழனி ஆகிய 6 மண்டலங்கள் அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில்,கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர்.கே.ராஜு அவர்கள் முன்னிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பேசும் பொழுது ,பருவகாலங்களில் மழை பெய்யும்பொழுது உருவாகும் காய்ச்சல் போன்ற பிற நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை முழுக்கவனத்துடன் செய்து வருகிறது. மழை பெய்ததும் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து 6 மண்டலங்கள் அளவிலான ஆய்வுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் டெங்கு பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தமிழகஅரசு மிகச்சிறப்பாக செய்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் மொத்தம் 13,000 ஆகும். இந்த எண்ணிக்கையானது தமிழக அரசின் துரித நடவடிக்கைகளின் மூலம் படிப்படியாக குறைந்து கடந்த 2013ம் ஆண்டு 6122 ஆகவும், 2014ம் ஆண்டு 1400 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெங்குவினை முழுமையாக ஒழிக்க தமிழகஅரசு பாடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் கொசு உற்பத்தியை குறைத்து அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் கொசு உற்பத்தியினை தடுப்பதற்கு புகை மருந்து மூலம் கொசுக்களை அழிப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவ மாற்றம் காரணமாக பூச்சிகள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி பாதுகாப்பது, வீடுகளில் மழை நீர் தேங்காவண்ணம் பார்த்துக்கொள்வது, குடிநீரை காய்ச்சி பருகுதல், நீர் பாத்திரங்களை கொசுக்கள் புகாவண்ணம் மூடிவைத்தல், காய்ச்சலுக்கான அறிகுறி ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெறுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களால் எடுக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த உயர் அதிகாரிகள் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து மேற்பார்வையிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமையை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து வகையான காய்ச்சலுக்கு தேவையான மாத்திரை, மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் இருப்பில் உள்ளது. இதுதவிர எந்தப் பகுதிகளிலும் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து, அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் குறித்த விபரங்களை 104 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். தகவல் பெறப்பட்டவுடன், அதை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகஅரசு எடுத்து வருகிறது என்றார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும்பொழுது ,காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஒரு வட்டாரத்திற்கு 10 மஸ்தூர்கள் சுகாதாரத்துறை மூலமாகவும், தேவையான நபர்கள் ஊரக வளர்ச்சித்துறை மூலமாகவும், தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொசு உற்பத்தியை தடுக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளது. “எலிசா” முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க மாவட்ட அளவில் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய முறை மருந்துகள், பாரம்பரிய மருத்துவ முறைகளான நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு அருந்துவதை ஊக்கிவித்து அவை அரசு மருத்துவமனைகளில் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், மதுரை மாவட்டத்தில் வேறெங்கும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் தயார்நிலையில் உள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் மரு.கே.குழந்தைசாமி, கூடுதல் இயக்குநர் (பொதுசுகாதாரம்) மரு.வடிவேலன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் .சிற்றரசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள், செய்தியாளர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.