Sep 20, 2014

கோவையில் இடைதேர்தல் மோதல்: அதிமுக எம்எல்ஏ உள்பட175 பேர் மீது வழக்கு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோவையில் மேயர் இடைதேர்தல் மோதல் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ. வேட்பாளர் உள்பட 175 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பா.ஜ. மேயர் வேட்பாளர் நந்தகுமார் நேற்று முன்தினம் தனது கட்சியினருடன் கோவை சவுரிபாளையம் மாரியம்மன் கோயில் மைதானம் அருகே காரில் சென்றார். அப்போது அங்கே தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி தலைவரின் கார் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த நந்தகுமார் மற்றும் கட்சியினர், வெளியூர்காரர்கள் தேர்தல் விதிமுறை மீறி தங்க கூடாது என்றனர்.இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார். வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து பாஜகவினர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக  துடியலூர் டி.வி.எஸ் நகரை சேர்ந்த பா.ஜ., இளைஞரணி செயலாளர் கார்த்திக்கை (25) போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினர் மீதும் பொது சொத்துக்கு சேதம்  ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் நந்தகுமார் தந்த புகாரின் பேரில் போடிநாயக்கனூர் நகராட்சி சேர்மன் பழனிசாமி உள்பட 50 பேர் மீதும், பாஜக மாவட்ட துணை தலைவர் தாமு கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு பாரதி நகரை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ சின்னச்சாமி உள்பட 50 பேர் மீதும், பீளமேடு அதிமுக 65வது வார்டு அவை தலைவர் ஜெயகோபால் கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் நந்தகுமார் உள்பட 25 பேர் மீதும், சவுரிபாளையம் தேர்வீதி அதிமுக நிர்வாகி வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் நந்தகுமார் உள்பட 50 பேர் என மொத்தம் 175 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் பெண் எஸ்.ஐ சாமியாத்தாள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தினால்தான் எஸ்.ஐ. மாற்றப்பட்டார் என்று பாஜகவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சாமியாத்தாள் இட மாறுதலுக்கான முறையான உத்தரவு இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை. எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டாரா அல்லது இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது