Apr 3, 2020

திருச்சி மலிவு விலை காய்கறி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி ஏப் 03

திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.  இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும்.  வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.