Mar 25, 2020

திருச்சி 24.3.20 மாவட்ட ஆட்சித்தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

 வெளிநாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் மூலம் திருச்சி வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 483 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது ரத்த பரிசோதனையின் போது கரோனா தாக்குதல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பி விட்டனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை அடையாள படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களிடம் நெருங்கிப் பழகிய குடும்பத்தினரும் வெளியில் வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதேபோல் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த பலர் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு கார் மூலம் சென்றுள்ளனர். அவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி உதவி திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடையில் நிதியுதவி அளிக்கப்படும். ரேஷன் கடைக்கு வரும்போது ஒரு மீட்டர் இடைவெளி பின்பற்றவேண்டும். ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1.32 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இசிஎஸ் மூலம் நிதி உதவி வரவு வைக்கப்படும். டீக்கடை, மளிகை கடை, காய்கறி கடை, பால் கடை போன்ற அத்தியாவசியத் கடைகள் திறந்து இருக்கலாம். ஆனால் கூட்டம் கூட கூடாது. இதேபோல் ஹோட்டல்களும் திறந்திருக்கலாம். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். கூட்டம் இல்லாமல் அதுவும் பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியூரில் இருந்து வந்த பயணிகள் 198 சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வந்து செல்ல தடை இல்லை. மாட்டுத்தீவனம், உரம் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் கிடையாது.  வீட்டில் பயன்படுத்தும் வழக்கமான சோப்பை பயன்படுத்தி கை கழுவலாம். மாஸ்க் மற்றும் சானிட்டரி திரவம் அவசியமில்லை. கரொனா தொடர்பான எவ்வித சந்தேகத்துக்கும் 1077 என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு வருவோர் ஷேர் ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் வரலாம்.
 தமிழகம் முழுவதும் வெளிநாடுகளிலிருந்து வந்த 54 ஆயிரம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 30, மணப்பாறை அரசு மருத்துவமனை 30 படுக்கைகள் உள்ளது. இது தவிர இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 வீதம் 60 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது.
 சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது தவறில்லை. ஆனால் கூட்டமாக கூடி அன்னதானம் வழங்க கூடாது. திருமண மண்டபங்கள் போன்ற இடங்களிலும் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.