Nov 8, 2014

பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் மலிவு விலை காய்கறிகள் ரூ.14 கோடிக்கு விற்பனை: அமைச்சர் தகவல்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

பொது மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத்துறையால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 210 மருந்தகங்களுடன் நடப்பு ஆண்டில் புதியதாக 100 அம்மா மருந்தகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு, தற்போது 17 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த 100 மருந்தகங்களுக்கும் கட்டமைப்பு வசதிக்காக ரூ.20 கோடி மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து பயன்படுத்தப்படும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மருந்துகள் விற்பனையில் குறைந்தபட்சம் 15 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வெளிச்சந்தையில் காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்ட 53 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 31 வகையான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகரில் இரண்டு நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் இயங்கி வருகின்றன. 2.11.2014 வரையில் 48,45,104 கிலோ டன் காய்கறிகள் ரூ.13.72 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தோட்ட பயிரிடுவோருக்கு கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக ரூ.147.08 கோடி அளவிற்கு காய்கறி சாகுபடி கடன் வழங்கப்பட்டுள்ளது.