Apr 1, 2020

திருச்சி போலி மருத்துவர்களை நம்ப வேண்டாம் அரசு சித்த மருத்துவர் காமராஜ்

கொரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து திருச்சி மாவட்ட சித்த அலுவலர் டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,


இந்தியாவை தொற்று நோயான கரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வித அச்சமும் இன்றி மக்கள் வெளியில் நடமாடி வருகின்றனர். அது நமக்கு தான் ஆபத்தை விளைவிக்கும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். அப்போது தான் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும். அரசு உத்தரவை மீறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.


அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகளிலும் பல ஆண்டுகளாக நுரையீரல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது புதிய மருந்து கிடையாது. இதை பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம். இது தடுப்பு மருந்தாகும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் கபசூர குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மக்கள் அதை வாங்கி பருகி நோய் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளியில் இந்த குடிநீர் பொடியை வாங்கும்போது அதில் நிறுவனப் பெயர், அனுமதி எண், மூலப்பொருள்கள் விபரம், விலை, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை பார்த்து வாங்க வேண்டும். இவை குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த மருந்துகளை வாங்க கூடாது என்றார்.