மதுரை மாவட்ட 61வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தமுக்கம் கலையரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரைப்பாண்டியன் வரவேற்றுப்பேசினார். மேயர் ராஜன்செல்லப்பா, கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், தமிழரசன், சாமி, கருப்பையா, கதிரவன், சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,019 பயனாளிகளுக்கு ரூ.4.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–
இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகிறது. இந்த சங்கத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். அவர்களுக்கும் அந்த சங்கத்தில் பங்கு தொகை உண்டு. நிர்வாகிகளாகவும் வரலாம்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 392 சங்கங்கள் நஷ்டத்தில் இருந்தன. அம்மாவின் ஆலோசனையின் பேரில் வேண்டிய உதவிகளை செய்து, அவை இப்போது ஒரு கோடிக்கு மேல் வருமானம் தரும் சங்கங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவுத்துறை மூலம் 56 ஆயிரத்து 43 விவசாயிகளுக்கு பயிர் கடனாக சுமார் ரூ.305.52 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வறட்சி நிவாரணமாக 64 ஆயிரத்து 216 விவசாயிகளுக்கு, அரசு ரூ.23.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயிர் கடன் வட்டி இல்லாமல் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் கூட 7 சதவீத வட்டியுடன் கூடுதல் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் கூட்டுறவு துறைக்கு வழி காட்டியாக திகழ்ந்து வருகிறது.
இதுதவிர கூட்டுறவு வங்கி மூலம் பால்மாடு வாங்க, ஆடு வளர்ப்பு, விவசாய உபகரணங்கள், கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், வீடு கட்ட மற்றும் வீட்டு அடமான கடன்களை வழங்குகிறது. மேலும் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையொல்லாம் விட 37 ஆண்டுகளாக வரலாற்று சாதனையாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக இன்று உயர்ந்துள்ளது. இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வில் ஒளியேற்றிய மக்கள் முதல்வர் அம்மாவை தினமும் வணங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள், பரிசுகளை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் பழனிவேலு, கூட்டுறவு இணைப்பதிவாளர் தனலட்சுமி, ஆவின் தலைவர் தங்கம், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜா, மண்டல தலைவர் சாலைமுத்து, ஜெயவேல், ராஜபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயபால், மாரிச்சாமி, பிரிட்டோ, புதூர் அபுதாகீர், முருகன், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புசெழியன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் முருகேசன் நன்றி கூறினார்