கடந்த மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்றுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாகஅதிமுக தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் " வஞ்சக தீர்ப்பு வழங்கிய கர்நாடக நீதிமன்றமே! மக்கள் முதல்வர் அம்மா அவர்களை விடுதலை செய்! இல்லையென்றால் தமிழகத்தில் வாழும் கர்நாடக மக்கள் அனைவரையும் சிறை பிடிப்போம்..." என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனால் இருமாநில மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. பெங்களூரு போலீஸ் கமிஷனர் ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை போனில் தொடர்புகொண்டு அந்த போஸ்டர்களை அகற்றுமாறுக் கேட்டுக் கொண்டதை அடுத்து சென்னையில் போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், இருமாநில மக்களிடையே பிரச்சனையை உருவாக்கும் வகையில் கன்னடர்களுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டுவதோ, சமூக வலைத்தளங்களில் அதை பரப்பச் செய்வதோ கூடாது என்றும் மீறி பரப்புதலில் ஈடுபட்டு பீதியை உருவாக்கும் விஷமிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் சுவரொட்டியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, திருச்சி மக்களவை எம்.பி.பி.குமார், எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், ஆயிரம் விளக்கு கே.சி.விஜய் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.