
ஜெயலலிதா கைதுக்குக் கண்டனம் தெரிவித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். படம்: ம.பிரபு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள், மற்ற கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 27-ம் தேதி அடைக்கப்பட்டார். தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை விடுவிக்க வலியுறுத்தியும் அதிமுகவினர் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. அதிமுக கொறடா மனோகரன் தலைமை தாங்கினார். இதில் கே.பி.முனுசாமி, டி.ஜெயக் குமார், செங்கோட்டையன் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் 115 பேர் பங்கேற்றனர். தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேர், இந்தியக் குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன் எம்எல்ஏ, சமக எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன், கொங்கு இளைஞர் பேரவை எம்எல்ஏ தனியரசு, புதிய தமிழகம் அதிருப்தி எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அனைவரும் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர். பெண் எம்எல்ஏக்கள் கருப்புச் சேலை கட்டியிருந்தனர். மாலை 5 மணி அளவில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தீக்குளிக்க முயற்சி
மதியம் 12 மணி அளவில் உண்ணாவிரதப் பந்தலை நோக்கி பம்மல் பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் தங்கராஜ், சிவக்குமார் ஆகியோர் ஓடிவந்தனர். ‘அம்மாவை விடுதலை செய்’ என்று கோஷமிட்டபடி, தயாராகக் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டனர். அருகே இருந்த போலீஸார், அதிமுக நிர்வாகிகள் விரைந்து வந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
இன்று கவுன்சிலர்கள்
சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் இன்று உண்ணா விரதம் மேற்கொள்ள உள்ளனர்.